பிரளயம் ஏற்பட்டபோது, மலை போல் இங்கு மணல் தேங்கியதால் சிறிய குன்று போல் ஆகியது. அவ்வாறு மணல் தேங்கியதால் 'தேங்கூர்' என்றும் 'தெங்கூர்' என்றும் அழைக்கப்பட்டது. அதனால் இத்தலத்து மூலவருக்கும் 'வெள்ளிமலைநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் 'திருத்தங்கூர்' என்றும் வழங்கப்படுகிறது. திரு - மகாலட்சுமி.
மூலவர் 'இரஜதகிரீஸ்வரர்', 'வெள்ளிமலைநாதர்' என்னும் திருநாமங்களுடன், சற்று உயரமான பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பிரஹன்நாயகி', 'பெரிய நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர். மேலும் நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனித்தனியாக லிங்கம் அமைத்து வழிபட்டதை குறிக்கும் வகையில் ஒன்பது லிங்கங்கள் இருக்கின்றன.
மகாலட்சுமி, இந்திரன், நவக்கிரகங்கள் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|